ASTROLOGE

ASTROLOGE

20 January 2011

மிதுனம் பொது பலன்


நீங்கள் பெரும்பாலும் உயரமான தேகம் படைத்தவர்களானாலும், புருஷ்டி குறைந்த சரீரம் படைத்தவர்கள். பரந்த நெற்றியும், பலமான தோள்களும், அழகான புருவங்களும், கருத்து நீண்ட கண் இமைகளும் பெற்றவர்கள். பிறரை வசீகரிக்கத் தக்க தனித்த சக்தியைப் பெற்ற உங்களின் கண்கள் விசேஷமான அழகைக்கொண்டவை. நயனபாஷை என்று சொல்லப்படும் கண் ஜாடையினாலேயே தங்களது உள்ளக் கருத்துக்களை, தெள்ளத் தெளிவாக அறிவிப்பர். உங்களின் நெற்றியின் மத்தியில் கீழ்மேலான நாமம் போன்ற ஒருகோடு நீண்டிருப்பதைப் பார்க்கலாம். நீங்கள் சோம்பலாக காலம் கழிக்க விரும்பமாட்டார்கள். எப்போதும் சுறுசுறுப்புடன் ஏதாவது ஒரு வேலையில் ஈடுபட்டவர்களாகவே காணப்படுவார்கள். இருந்தாலும் சில சமயங்களில் உங்களை கவலைகள் சூழ்ந்துக் கொள்வது உண்டு. பிறருக்கு எடுத்துக்காட்டாக தாம் எடுத்துக் கொண்டு முடிக்க விரும்பிய பணிகள் பூர்த்தியாவதற்கு தடைகள் ஏற்படுவதோ அல்லது அதற்குத்தக்க சூழ்நிலைகள் அமையாததோ இந்த கவலைகளுக்குக் காரணமாக இருக்கலாம். பல விஷயங்களிலும், புதிதாகக் கண்டு பிடிக்க வேண்டிய பொருள்களிலும் உற்பத்தியைப் பெருக்குவதிலும் உங்களுக்கு ஆர்வமும், பரந்த அனுபவரும் நிறைந்திருக்கும். உங்களுடன் உற்பத்தித்திறன் தெரிந்திருக்கும். நிதானமான அறிவாற்றல் படைத்தவரானாலும் சமயத்துக்கேற்றவாறு தங்களது குண இயல்புகளை மாற்றிக் கொள்ளும் இயல்பு பெற்றவர்கள். ஆயினும் நீங்கள் ஈடுபட்டிருக்கும் வேலைகளில் எத்தகைய இடையூறுகள் ஏற்படினும், உறுதியுடன் போராடி, குழப்பங்களை கடந்து வெற்றியும் பெறுவீர்கள். எவ்வித கடினமான வேலைகளை மேற்கொண்டாலும் பொறுப்பேற்று தவறுதலின்றி வெற்றியுடன் முடித்துக் கொடுத்து பரவசமடைவீர்கள். அந்த அளவுக்கு தனக்குதானே ரசிக்கவும் செய்வார்கள்.

கருத்த நிறமும், மெல்லிய தேகமும் கொண்ட உங்களது மூக்கு உயர்ந்திருக்கும். கோபம் கொண்டாலும், அதை மறைத்துக் கொண்டு சிரித்துக் கொண்டு பேசும் நீங்கள் பிறரை எளிதில் நம்பாத சந்தேகமும் பயந்த சுபாவமும் கொண்டவர்கள். சிறிய விவகாரமானாலும் சுயமாக, பிறர் உதவியின்றி உங்களால் செய்ய இயலாது பலரது அபிப்ராயத்தைக் கேட்டுத் தெரிந்து கொண்டாலும் தனது அபிப்ராயத்தை வெளியிடமாட்டார்கள்; எதையும் சீக்கிரம் கிரகித்துக் கொள்வீர்கள். ஆனால் துணிந்து எதிலும் ஈடுபட மாட்டீர்கள். வெளித் தோற்றத்துக்கு வெகுளியாகவும், கோமாளியாகவும், ஏமாளியாகவும் காணப்படும் நீங்கள், நயமாகவே சிரித்துப் பேசி தங்கள் காரியத்தை சாதித்துக் கொள்ளும் காரியவாதிகள் என்றால் மிகையாகாது. அதிகம் உழைக்காமல், பிறர் உழைப்பைப் பயன்படுத்திக் கொண்டு ஈடுபடும் காரியங்களில் வெற்றி காண்பவர்கள்; தங்களுக்குப் பிடிக்காதவர்களிடத்தில் தொடர்பை அறுத்துக் கொள்பவர்கள். அவர்களைக் கண்டாலே சீறி விழுந்து முகம் கோணுவார்கள். அவர்களுக்கு ஏதேனும் தொல்லைகள் ஏற்பட்டால் அதைக்கண்டு எள்ளி நகையாடுவார்கள். கூர்மையான புத்தி, யுக்தி, சாதுரியம் நிறைந்த இவர்கள் எதிலும் தான் மாட்டிக்கொள்ளாமல் நடு நிலை பெறுவார்கள். அவசர அவசரமாக எல்லாவற்றையும் முடிக்க வேண்டுமென்கிற துடிதுடிப்பு இவர்களிடத்தில் காணப்படும். எதையும் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவல் நிறைந்தவர்கள். இவர்களுடைய பேச்சில் வேடிக்கையும் கிண்டலும் காணப்படும்.சிரிக்க சிரிக்கப் பேசும் சுபாவம் படைத்த இவர்கள் தந்திரமாக சிரித்துப் பேசி காரியத்தை சாதிக்கும் ஆற்றல் பெற்றவர்கள். பிறரை ஏளனமாகப் பேசுவதிலும், நையாண்டி செய்வதிலும் சாமர்த்தியசாலிகள் இவர்களால் தங்களது ஆத்திரத்தை அடக்க முடியாது. உள்ளத்தில் தோன்றியதை வெடுக்கென்று எடுத்தெறிந்து பேசி விடுவார்கள். பிறருடைய அபிப்ராயங்களைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள். பெண்களிடம் நைசாகவும், அன்பாகவும் பேசி தங்கள் நம்பிக்கைக்கு பாத்திரமாமக்குவதில் சாமர்த்தியம் படைத்தவர்கள்.பிறர் ரசிக்கும்படி பேசும் இவர்கள் தன்னுடைய ரசனையை வெளிப்படுத்திக் காட்ட மாட்டார்கள். சாஸ்திர ஆராய்ச்சி விஷயங்களிலும் வெற்றி பெறுவார்கள். பிறரை இவர்களை அடக்கி ஆளமுடியாது. சமயத்துக்கேற்றாற் போல பிறரோடு ஒத்துழைக்கும் சாமர்த்தியமுள்ளவர். இவர்களுக்கு தனிமை பிடிக்காது. ஊர் ஊராக பிரயாணம் செய்து புதுமையான விஷயங்களை அறியவும், சேகரிக்கவும் ஆவல் கொண்டவர்கள். சமூக வாழ்வில் தனிப்பட்ட புகழும் அந்தஸ்தும் பெற்றவர்கள். பல்வேறு மனப்பான்மை கொண்ட பலர்கூடுஙட சங்கங்ளிலும் சபைகளிலும் இவர்கள் தமது பேச்சுத்திறமையால் அனைவரையும் ரசிக்கும்படி செய்யும் ஆற்றல் படைத்தவர்கள். பெரும்பாலும் நல்ல இதயம் படைத்த இவர்கள் சொற் சாதுர்யமும் அறிவாற்றலும் நிறைந்தவர்கள். தூண்டித் தூண்டல் அறியும் சாமர்த்தியம் பெற்றாலும்

உங்களது உள்மனத்தில் ஏதோ ஓர் இனமறியாத சந்தேகமும், பயமும், கவலைகளும் குடி கொண்டிருக்கும்.

இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் சிறிய குடும்பத்தில் தோன்றியவர்களாயினும், சிறுவயதிலிருந்தே குடும்பப் பொறுப்பில் ஈடுபட வேண்டியவர்களாயிருக்கிறார்கள். இளைய சகோதரிகளுக்கு கல்வி கற்பிக்கவும், அவர்களுக்கான சுபகாரியங்களை செய்து முடித்தலும் ஆன பொறுப்புகள் இவர்களைச் சார்ந்திருக்கும். சிறுவயதிலிருந்தே குடும்பத்தின் சகல பொறுப்புகளையும் கற்றுக் கொள்ளும்.உங்களுக்கு வயது வளரவளர பொறுப்புகளும் அதிகமாவதால் திருமணமான பின்னரும் உங்களால் குடும்பப் பொறுப்புகளிலிருந்து விடுபட முடிவதில்லை. எனவே உங்களது குடும்பத்தின் நிலையும் குறைந்ததும் குறையாமலும், வளர்ந்தும் வளர்ச்சியடையாமலும், வளர்வதும் தேய்வதும் போல மாறி மாறித் தோற்றமளித்திடும். உங்களுக்கு ஏற்படும் தொழிலுக்கும் சம்பாதிக்கும் வருமானத்துக்கும் எவ்வித தொடர்பும் இருக்காது. பல வழி துறைகளில் பணம் சம்பாதிக்கும் சாதுரியம் படைத்த உங்களிடத்தில் எப்போதும் பணப்புழக்கம் இருக்கும். பிறருடைய பணமும் பொருளும் தாராளமாக உங்கள் கையில் நடமாடும். சில சமயங்களில் கடன் வாங்கியும் தாராளமாக செலவு செய்வீர்கள். ஆடம்பர வசதிகளை தாராளமாக அமைத்துக்கொள்ளும் விருப்பமுள்ளவர்களாதலால், கடன் வாங்கியாவது தங்களது விருப்பங்களை பூர்த்தி செய்து கொள்வீர்கள். அதனால் விரோதங்கள் ஏற்பட்ட போதிலும், கவலைப்படாமல் தங்கள் விருப்பங்களைப் பூர்த்திசெய்து கொள்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். பணவசதி தளர்ந்தும், வசதி குறைந்தும் காணப்பட்டாலும் தங்களது சுகமும், சுயதேவையும் குறையாமல் பார்த்துக் கொள்வீர்கள். பிறருடன் பழகுவதிலும், உறவாடுவதிலும், நட்புக்கொண்டு மனங்கவர்ந்து அவர்களை வசப்படுத்துவதிலும் உங்களது அசாதாரண திறமை பளிச்சிடும்.

சகோதர-சகோதரிகளுக்காக பாடுபட்டு உழைப்பவர்களாயினும் அவர்களால் உங்களுக்கு கவலைகள் அதிகம் ஏற்படும். சகோதர-சகோதரிகள் அதிகமிருந்தாலும், ஒற்றுமை குறைந்தே காணப்படுவார்கள். உடன்பிறந்தோர்களால் ஆதரவும், பண உதவிகளும் அடிக்கடி ஏற்பட்டு வந்தாலும், கருத்து வேற்றுமைகளும், மனத்தாங்கல்களும் அதிகரிக்கும். மூத்த சகோதரர்களை விட இளைய உடன்பிறப்புகளைத் தான் அதிகம் படைத்தவர்கள். உங்களுடைய இளை சகோதர-சகோதரிகள் வாழ்க்கையில் வளமும் வசதியும் பெற்று வாழ்ந்திடுவார்கள்.

உங்களுக்கு நீண்ட காலவேலை உழைப்புகளும் ஒரே மூச்சில் யந்திரத்தைப் போல் உழைப்பதும் பிடிக்காது. கடின உழைப்பை ஏற்காததும், நாசூக்கான வேலைகளிலும் அதிகம் ஈடுபடுவார்கள். புத்தி சாதுரியமும், அறிவு வளர்ச்சியும் அதிகம் ஈடுபடும் வேலைகளான கணக்கு பரிசீலனையில், உங்களது திறமை பளிச்சிடும். பிறர் உதவியின்றி உங்களால் சுயமாக எநத காரியத்திலும் ஈடுபட முடியாதமையால், கடின உழைப்புகளை நீங்கள் ஏற்கமாட்டீர்கள். எளிதானதும் கடு உழைப்பை ஏற்காததும், மென்மையானதும் பேச்சுத் திறமையால் சாதிக்கக்கூடியதும் ஆனகாரியங்களை சாமர்த்தியத்துடனும், பொறுப்புடனும், திறமையுடனும் செய்து முடிக்கத் தக்கவர்கள். வெளி வட்டாரங்களில் பிறருடன் பழகி சாதிக்கும் காரியங்களிலும் ஏஜென்சி, காண்ட்ராக்ட், கமிஷன் போன்ற பணிகளிலும் உங்களுடைய திறமை நன்கு பளிச்சிடும்.

உங்களுக்கும், உங்களுடைய தாயாருக்கும் உள்ள உறவு மிக அன்னியோன்னியமான பாவம் கொண்டதாக இருக்கும். தாயாரின் அன்பும், பாசமும் சம்ரக்ஷணையும் இந்த ஜாதகர்களுக்கு இறுதி வரை உண்டு. அதுபோலவே நீங்களும் தாயாரின் மீது அன்பும்-பாசமும் அதிகமாகக் கொண்டிருப்பீர்கள். தகப்பனாரின் ஆதரவைவிட தாயின் ஆதரவு மிகுந்து காணப்படும். உங்களை அன்னையின் செல்லப் பிள்ளைகள் என்று கூறினால் மிகையாகாது. நீங்கள் ஆடம்பர வசதிகளை அனுபவிப்பதில் அலாதி பிரியமுடைய சுக ஜீவிகள் என்றால் மிகையாகாது. உங்ளுடைய விருப்பத்துக்கேற்றவாறு நவீன ஆடம்பர வசதிகள், வீடு வாகனம் போன்ற வாய்ப்புகள் எளிதில் ஏற்படும். விலையுயர்ந்த பொருள்களையே விரும்பி ஏற்கும் உங்களில் சிலர் சிற்றின்ப ரசிகர்களாகவும் விளங்குவார்கள். கேளிக்கை வினோதங்களிலும் வேடிக்கைப் பேச்சுகளிலும் நாட்டம் கொண்ட நீங்கள் நடன-நாடக-சங்கீத வினோதங்களை ரசிப்பதிலும் அவற்றில் பங்கேற்பதிலும் ஆர்வம் கொண்டவர்கள். கலை யம்சங்களில் உங்களின் திறமை ஒளிவிட்டு தனியாக பிரகாசிக்கும். வாகன வசதியும், வீட்டு வசதியும் உங்கள் விருப்பத்துக்கேற்றவாறு அமைந்திருக்கும். நீகங்கள் பெரும்பாலும் உயர்தரக் கல்விச் சிறப்பு பெறாவிட்டாலும் எதையும் கூர்ந்து கவனித்து கற்றுணரும் ஆற்றல் படைத்தவர்களாதலால், உயர்தரக் கல்விக் கேற்ற திறமையும், சாதுரியமும் உங்களிடம் பிரதிபலித்துக் காட்டும். எல்லாவிதமான சாஸ்திரங்களிலும், கலைகளிலும் ஆராய்ச்சி செய்யும் ஆர்வம் கொண்டவர்களாதலால் எந்தத் துறையிலும், பூர்த்தியாக தேர்ச்சி பெற முடிவதில்லை. ஆயினும் எந்த துறையில் ஈடுபட்டாலும், அதில் உங்களுடைய தனித்திறமை சிறந்து விளங்கும். ஒரு சிலர் இசை, இலக்கியம் போன்ற கலைகளிலும் பெரும்புகழும், செல்வமும் பெற்றிடுவார்கள்.உங்களுக்கு புத்திரபிராப்தி நாள் கடந்துதான் ஏற்படும். பிள்ளைகளால் உங்களுக்கு ஏதும் அனுகூலமிருப்பதில்லை. மாறாக தொல்லைகளும், சங்கடங்களும், பிரதிகூலங்களும் அதிகரித்துதான் காணும். உங்களுக்குப் பிறக்கும் பெண்களால் சுகமும், மேன்மையும் அதிகரித்துக் காட்டும். வயது முதிர்ந்த காலத்தில் பிள்ளைகளால் தொல்லைகள் அதிகரித்து மனவேற்றுமை ஏற்பட்டு அவர்களிடமிருந்து பிரிந்து வாழ நேரிடும்.இந்த லக்னத்தில் உதித்தவர்களுக்கு வாழ்க்கையில் ஏற்படும் பாக்கியங்களின் முன்னேற்றத்துக்கு இடையிடையே இடையூறுகளும், தடைகளும் மாறுதல்களும் தலையிட்டு நிரந்தரமான பாக்கிய சுகத்தை அனுபவிக்க வொட்டாமல் ஏற்படுத்தும்.

உங்களுக்கு இரத்தவாதம், வாத சம்பந்தமான நோய்கள்; நரம்பு பலஹீனம் போன்ற நோய்கள் ஏற்பட்டாலும், நீங்கள் தேக ஆரோக்கியத்தைக் குறித்து கவலைப்படமாட்டீர்கள். எந்த நோய் ஏற்பட்டாலும் மனோபலத்தைக் கொண்ட நோய்களைப் போக்கிக் கொள்ளலாம் என்ற மனோ தைரியம் படைத்தவர்கள். சிலர்க்கு மறைவிடமான நோய்கள் பீடிக்கும். அறுவை சிகிச்சைகளும் செய்து கொள்ள நேரிடலாம். எப்படியிருந்தாலும் உங்ளுக்கு நீடித்த நோய்களெதுவும் ஏற்படாது. அப்படி ஏற்பட்டாலும் உடனுக்குடன் மறையும். நீங்கள் கூடுமான வரையில் மிக காரசாரமான பண்டங்களையும் உஷ்ணம் மிகுந்த பண்டங்களையும் நீக்குவது நல்லது. பசுமையான ஆகாரங்களையும் குளிர்ந்த வஸ்துக்களையும், பால், தயிர், நெய், வெண்ணெய் போன்ற ஆகாரங்களையும் அடிக்கடி சேர்த்துக் கொள்வது நல்லது.

மிதுன லக்னத்தில் தோன்றியவர்கள் உயர்ந்த ரக ஆடைகளையும், உணவு வகைகளையுமே விரும்புவார்கள். பசி நேரங்களிலும் உயர்ந்த ரகஉணவு வகைகளையே தேடிக் கொள்வார்கள். உடைக்காகவும் ஆபரணங்களுக்காகவும் அதிகம் செலவு செய்வார்கள் இவர்கள் சுயமாக பூமி, கட்டடம், மனை போன்ற ஸ்திர சொத்துகளை அமைத்துக் கொள்வதாலம் மற்றும் வாகன வசதிகளைப் பெருக்கிக் கொள்வதாலும், பயிர்-பண்ணை முதலிய விவசாயத் துறைகளை சீர்திருத்தி அமைத்துக் கொள்வதாலும் இவர்களுக்கு அனாவசியமான கடன் தொல்லைகள் உண்டாகும். பிறர்களுக்காக இவர்கள் பாடுபடுவதாலும், நிலத்தைப் பண்படுத்துவதாலும், வாடகை செலுத்த நேரிடுவதாலும், கடனும், வட்டியும் அவற்றால் வழக்குகளும் ஏற்பட்டு தொல்லைகள் ஏற்படும். மற்றபடி இவர்களுக்கு வேறு கவலைகள் ஏற்படா.

திருமண வாழ்க்கையைப் பொறுத்தவரையில் உங்களை அதிர்ஷ்டசாலிகள் என்றே கூறவேண்டும். உங்களுக்கு வாய்க்கும் மனைவி சமூக அந்தஸ்திலோ அல்லது அழகிலோ நீங்கள் பாராட்டும் விதத்தில் சிறப்பான தன்மை பெற்றிருப்பார்கள். இல்லற இன்பம் இனிதாகவே அமையப்பெற்ற நீங்கள் திருமண வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களாகவே காணப்படுவார்கள். ஆயினும் ஒரு சில விவகாரங்களில் ஒற்றுமையும் பல விஷயங்களில் மனவேற்றுமையும் தம்பதியிடையே ஏற்பட்டாலும், நீங்கள் எதையும் மறைக்கும் சுபாவமுடையவர்களாதலால் இந்த கருத்து வேற்றுமைகள் பிறருக்குத் தெரியாத வண்ணம் மறைத்திடுவீர்கள். எனவே திருமண வாழ்க்கையில் பூசல்கள் ஏற்பட்டாலும், வெளிக்கு அமைதியான குடும்ப வாழ்க்கையை நடத்துவதாகக் காட்டிக் கொள்வீர்கள்.

இந்த லக்ன ஜாதகர்களுக்கு ஆயுள் பலம் நீண்டிருக்கும். வாழ்க்கையில் எவ்வளவு கஷ்ட நஷ்டங்கள் தோன்றினாலும் விபத்துகள் நேரிட்டாலும், சுமார் 80 வயதுவரை வாழ்ந்திடும் தீர்க்காயுள் பெற்றவர்கள்.

சுயநலம் காரணமாகவும், சிற்றின்பத்தில் நாட்டம் கொள்வதாலும், சதி-வஞ்சனையில் தேர்ந்த சில நபர்களுடன் சகவாசம் வைத்துக்கொள்வதாலும், உங்களுக்கு தொல்லைகள் மிகுந்து காணப்படும். புத்திரர்களால் வீண் தொல்லைகளும் கஷ்ட நஷ்டங்களும் ஏற்படுவதுமல்லாமல், உறவினர்களாலும், நண்பர்களாலும் கடன் தொல்லைகளும், வம்பு வழக்குகளும் ஏற்படும். தகப்பனாராலும், அவரது வர்க்கத்தினராலும் உங்களுக்கு தொல்லைகளே மிகுந்து காணும். தங்களது அவசர முடிவால், தொழிலில் தமக்குத்தாமே இன்னல்களைத் தோற்றுவித்துக் கொள்வார்கள். எனவே, நீங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருத்தல் நலம்.

இவர்கள் அந்தரங்கமான தர்மகுணமும், தெய்வ பக்தியும் அமைந்தவர்கள். ஏழை எளியவர்களிடத்தில் தயாளமும், இரக்கமும் கொண்டிருப்பார்கள். தர்ம குணத்தையும் தெய்வ பக்தியையும் வெளிக்காட்டிக்கொள்ள விரும்பாத இவர்கள் சில தருணங்களில் வீண் படாடோபத்திற்காகவும், ஆடம்பரத்துக்காகவும், தாங்கள் செய்யும் தரும காரியங்களை விளம்பரப்படுத்தத் தயங்கமாட்டார்கள். இவர்களுக்கும், தகப்பனாருக்கும் கருத்து வேற்றுமைகள் அதிகரித்திருப்பினும் தகப்பனாரிடத்தில் பயம்-பக்தி, மரியாதை முதலியவற்றில் குறைவில்லாமல் பக்குவமாக நடந்து கொள்வார்கள். தகப்பனாரும் நீண்ட ஆயுள் பெற்றவராக இருப்பார். ஜாதகரின் வளர்ச்சிக்கேற்றவாறு தகப்பனாரின் யோக பாவங்களும் செல்வ வளர்ச்சியும் அதிகரித்துக் காணப்படும். எந்தத் தொழிலை எடுத்துக் கொண்டாலும், தனது சொந்த வேலை போலக் கருதி செய்வதாலும், நீதி, நேர்மையுடன் ஓரவஞ்சணை இல்லாமல் பாடுபடுவதாலும் அந்தத் துறையில் பேரும் புகழும், வெற்றியும், வாய்க்கும். இரும்பு, வெள்ளி, செம்பு, தங்கம், ஈயம் போன்ற பஞ்சலோகங்கள் உங்களுக்கு வியாபாரக் கருவிகளாகவோ அல்லது தொழிற்கருவிகளாகவோ அமையும். பேங்க், வட்டிக்கடை, நகை வியாபாரம் முதலியவற்றிலும் ஈடுபடுவார்கள். துரித காலத்தில் நிறைய லாபம் பெறவேண்டும் என்ற எண்ணத்துடன் ஹேஷ்ய விவகாரங்களில் ஈடுபட்டால் நஷ்டங்களும் பொருள் தேசமும் ஏற்படும். எனவே எச்சரிக்கையாக இருத்தல் நலம். விவசாயம், வியாபாரம் போன்ற தொழில்களில் வெற்றி காணுவார்கள். ஆனால் எந்த வேலையிலீடுபட்டாலும் இரண்டு நோக்கங்கள் இருக்கும். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க வேண்டும் என்ற கொள்கையை உடையவர்களாதலால் நீங்கள் போடும் திட்டங்கள் அதை அனுசரித்தே இருக்கும். உத்தியோகஸ்தர்களாயினும் ஏதேனும் உபதொழில் செய்து அதன் மூலம் வருவாயைப் பெருக்கிக் கொள்ள முனைவர்.

உங்களுக்கு மருத்துவத் துறையில் நல்ல தேர்ச்சி ஏற்படும். அரசாங்க மருத்துவமனைகளில் டாக்டர்களாகவும், மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியர்களாகவும் பணிபுரியும் வாய்ப்பு ஏற்படும். ஒரு சிலர் சட்டக் கல்வியிலும் தேர்ச்சி பெற்று, சட்ட நுணுக்கங்களைக் கற்று, தேர்ந்த வழக்கறிஞராகவும் பணியாற்றுவார்கள். அரசியலிலும் சிலர் முன்னேற்றம் பெறுவதுண்டு. அரசாங்கத்துடன் தொடர்பு கொண்ட நிறுவனங்களிலும், ஏஜென்சி, கமிஷன், காண்டிராக்ட் போன்ற துறைகளிலும் வாய்ப்புகள் ஏற்படும். உணவுப் பண்டங்களை பதப்படுத்தி ஏற்றுமதி செய்வதிலும், பால், நெய், வெண்ணெய் முதலிய வஸ்துகளை விருத்தி செய்வதாலும், கேளிக்கை வினோதக் காட்சிகளை நடத்துவதாலும், வருவாயைப் பெருக்கிக் கொள்ள முனைவார்கள். அரசாங்கத் துறைகளிலும், மின்சார இலாகா, ரயில்வே போன்ற இலாகாக்களிலும் பணிபுரியும் வாய்ப்பு ஏற்படும். இரும்புத் தொழிற்சாலைகள், மின்சார சாமான்கள், அரவைமில்கள், லாரி, பஸ், டாக்ஸி போன்ற போக்குவரத்து சாதனங்கள் உங்களுக்கு சுயதொழில்களாக அமையும். விறகு, கரி, காட்டிலாகா குத்தகை போன்ற இனங்களிலும் நீங்கள் ஆதாயம் அடைந்திடுவார்கள்.இனி, இந்த லக்னத்தில் பிறந்த பெண்களின் பலன்களைப் பார்க்கலாம்.

நீங்கள் தெளிவான அழகிய முகத்தைப் பெற்றவர்கள். நீங்கள் பிறரிடத்தில் நயமாகவும், இனிமையாகவும் பழகுவதால் எல்லோருக்கும் நல்லவர்களாகவே காட்சியளித்திடுவீர்கள். எந்தக் காரியத்திலீடு பட்டாலும் உங்களது விசேஷ திறமையும் நிர்வாக சக்தியும் பிரகாசிக்கும். இவர்களது திருமண வாழ்க்கை வெற்றி பொருந்தியதாக அமைந்து சந்தானம் சௌபாக்கியம் முதலிய நற்பலன்களை மேன்மேலும் பெருக்கிக் கொள்வார்கள். எக்காரணத்தாலும் உங்களது மனதிற்கு சிறு சலிப்பு ஏற்பட்டாலும், உங்களைத் தேற்றி அமைதிப்படுத்த வெகுநேரம் செல்லும். உங்களுடன் பழகுபவர்கள் சற்றும் ஏறுமாறாக நடந்து கொண்டார்களானால் அவர்களிடம் மிகவும் பொல்லாதவர்களாக நடந்து கொள்வார்கள். உங்களுடைய மனோபாவத்துக் கிசைந்தாற்போல் பழகி வந்தால் உங்களின் நட்பு பெற்றவர்களை பாக்கிய சாலிகள் எனலாம்.

No comments:

என்னில் உள்ளது