ASTROLOGE

ASTROLOGE

22 June 2011

கன்னி பொதுபலன்-பாகம்-2


இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு போதுமென்ற பணவசதி நிரந்தரமாக தாராளமாக அமையும். நாம் ஏற்கெனவே சொல்லியிருப்பதைப் போன்று ஓய்வு நேரத்தையும் வீணாக்காமல் ஏதாவது பணியிலீடுபட்டு வருமானத்தைப் பெருக்கிக் கொள்வார்கள். தமது அறிவு, திறமை, ஆராய்ச்சி சாதனை இவற்றை முதலீடாகக் கொண்டு அவற்றாலும் வருமானத்தைப் பெருக்கிக் கொள்வார்கள். அறிவாற்றல் குறைந்த இவர்களுக்கு பணக்காரக் குடும்பங்களிலிருந்து வாழ்க்கைத் துணைவி அமைவர்.

இவர்கள் பெரிய குடும்பத்தில் பிறந்தவர்களாயிருந்தாலும் ஆரம்பத்தில் ஒற்றுமையாக இருந்து திருமணத்துக்குப் பின் பிரிந்து சொந்தமாக குடும்பம் அமைத்துக்கொள்வார்கள். ஆயினும், சகோதரர்களிடையே ஒற்றுமையும் அன்பும் பற்றுதலும் மாறாமலிருக்கும். சூழ்நிலை காரணமாக பிரிந்திருக்க நேரிடினும் முக்கியமான சம்பவங்களில் ஒருவரையொருவர் கலந்தாலோசிக்காமல் எக்காரியத்திலும் ஈடுபடமாட்டார்கள். இவர்களுடைய பெயரம் புகழும் சகோதரர்களுக்கு இருப்பது போன்றே, அவர்களுடைய பெயரும் புகழும் இவர்களுக்குமிருக்கும். அதிக சகோதர சகோதரிகளைப் பெற்ற இவர்களுக்கு அவர்களைப் பற்றிய கவலைகளும் அடிக்கடி தலைதூக்கும்.

எந்த விஷயமும் புதிதாகக் கேள்விப்பட்டால் அதை பற்றிய உண்மைத் தத்துவத்தை தீர ஆராயந்து பார்த்து அறிந்து கொள்ளாவிட்டால் இவர்களுக்கு தூக்கம் பிடிக்காது. எக்காரியத்திலும் ஈடுபடுவதற்கு முன்பு பலமுறை தீர ஆலோசித்து, அறிவாளிகளின் கருத்தையும் மற்றும் பெரியவர்களின் புத்திமதியையும் பெற்றபின்பே செயலில் இறங்கிவிடுவார்கள். எக்காரியத்திலும் துணிவுடன் ஈடுபட்டாலும் பயமும் கூடவே இருக்கும். உத்தியோக விஷயமாகவும், தொழில் முயற்சிகளுக்காகவும் காரியங்களுக்காகவும் அடிக்கடி சிறு பிரயாணங்களை ஏற்றுக் கொள்ள நேரிடும்.

தேக உழைப்பு அதிகம் ஏற்கும் வேலைகள் இவர்களுக்குப் பிடிப்பதில்லை. மூளையைச் செலவிடும் வேலைகள் எவ்வளவாயினும் தயங்காமல் ஏற்றுக்கொள்வார்கள். அடிக்கடி சுற்றுப் பிரயாணங்கள் செய்வது இவர்களுக்குப் பிடிக்காத ஒன்றாயினும், வாழ்க்கையில் அடிக்கடி பிரயாணங்களை ஏற்க வேண்டித்தான் நேரிடும். கொடுத்தவாக்கை மீறுபவர்களிடத்தில் பெருங்கோபம் கொள்வார்கள். இவர்களுக்கு சிறு நோய்-நொடிகள் ஏற்பட்டாலும் அதிக பயம் கொண்டு பெரும் செலவு செய்தாவது உயர்தர சிகிச்சைகளை மேற்கொள்ளுவார்கள்.

குடும்பம் அமைவதைப் போன்றே தாயார் அமையும் விஷயத்திலும் கன்னி லக்னக்காரர்கள் மிகவும் பாக்கியசாலிகள். தாயாரின் அன்பும், ஆதரவும் இவர்களுக்கு என்றும் குறையாமல் இருந்துவரும், தீர்க்காயுள் பெற்ற தாயார், தங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் நடந்து, வாழ்க்கைத் துணைவி வந்து, மகிழ்ச்சிகரமான குடும்பமாக பிள்ளைகள் பிறந்து, குடும்பச் சிறப்பு வளர்ச்சியடைவதைப் பார்க்கும் அத்தாயின் அன்பும் பாசமும், பற்றும் இவர்களுக்கு கடைசிவரை நிலைத்து நீடித்திருக்கும் என்றால் கன்னி லக்ன ஜாதகர்கள் மற்றவர்களைவிட பாக்கியசாலிகள் என்பதில் தவறேதுமில்லை யல்லவா?

இந்த லக்னத்தில் பிறந்த ஜாதகர்கள் என்றும் சுகமான வாழ்க்கையே வாழவிரும்புபவர்கள். இவர்கள் விருப்பத்திற்கேற்றவாறே வாழ்க்கையும் அமையப்பெறும் அதிர்ஷ்ட சாலிகள் என்றால் மிகையாகாது. அதாவது எத்தனை தொல்லைகள், துன்பங்கள், கஷ்டங்கள் நேரிட்டாலும் இவர்களுடைய வாழ்க்கை வசதிகள் மட்டும் எப்போதும் குறையாது. பார்ப்பவர்களுக்கு இவர்களுடைய இக்கட்டான நிலைகளும் படும் கஷ்டங்களும் வெளிக்குத் தெரியாது. இன்ப துன்பங்களை பொருட்படுத்தாது நடுநிலையிலேயே காணப்படும் இவர்கள் எத்தகைய துன்பம் நேரிடினும் பொருட்படுத்த மாட்டார்கள். இவர்களுக்கு உயர்ந்த லட்சியங்களும் அரிய நோக்கங்களும் இருப்பினும் போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்ற ஆன்றோர் வாக்கிற்கிணங்க கிடைத்ததைக் கொண்டு மனத்திருப்தி பெறுவர். கிட்டாத பொருளின் மேல் இச்சை வைத்து ஏங்குவதை விட கிடைத்ததைக் கொண்டு திருப்தியடையும் மனநிலை பெற்றவர்கள். திருமணமான பின்னரும் மக்கள் பிறந்த பிறகும் சொந்தமாக வீடு-வாகன வசதி அமைத்துக்கொள்வர் ஆயினும் இவர்கள் அமைத்துக்கொள்ளும் வீடு, இவர்களுக்குப்போதுமானதாக இருக்குமே தவிர விருந்தினர்கள் வெகுநாட்கள் தங்கக் கூடிய வசதியைப் பெற்றிருக்காது.

உள்ளத் தூய்மையும், உயர்ந்த நெறியும், குற்றமற்ற குறிக்கோளும் கொண்ட இவர்களது உள் மனம் எதையும் கற்று ஆராய்ந்து உண்மையை உணர்ந்துகொள் என்று தூண்டிக் கொண்டே இருக்கும். பல விஷயங்களையும் தெளிவுறக் கற்று சிறந்த பண்டிதனாக வேண்டும் என்ற ஆசை சிறு வயதிலிருந்தே ஏற்படுவதால் கல்விதான் இவ்£களுக்கு அரிய பொக்கிஷமாக விளங்கும். வித்ய ஸ்தானத்தில் கிரகங்கள் நன்கு அமைந்திருக்காவிட்டாலும் புதன் பாபகிரக சேர்க்கை பார்வை பெற்றிருந்தாலும்கூட ஓரளவாது கல்விப் பயிற்சி பெற்றவர்களாக இருப்பார்கள். பலர் பள்ளியில் ஆசிரியரை கேள்விமேல் கேள்வி கேட்ட வண்ணமிருப்பர். சில சமயங்களில் ஆசிரியர்கள் இவர்களுக்குவிடையளிக்க திணறக்கூடிய சூழ்நிலைகள் ஏற்படும். உயர்தரக் கல்வி பெறுவதற்கு கல்லூரியில் சேரும் வாய்ப்பு அமையாவிடினும், சுயமுயற்சியால் உயர்தரக் கல்வி பெற்று வெற்றி பெறுவார்கள். இவ்வாறு உயர் கல்வி பெறுவதற்காகவே, சிலர் ஆசிரியர் தொழிலில் ஈடுபடுவதுண்டு. இவர்கள் கல்லூரியில் பயில்வதைவிட சொந்தமாக பல அரிய நூல்களை பல நூல் நிலையங்களில் படித்துக் கற்றுணர்வர். வாழ்வின் பெரும்பகுதியை நூல் நிலையங்களில் பேரறிஞர் இயற்றிய நூல்களை வாசிப்பதிலும், ஆராய்ச்சி செய்வதிலும் காலம் கழிப்பார்கள். படித்துக் கொண்டிருக்கும்போதே தோன்றும் அரிய கருத்துக்களை மறந்து விடாமலிருக்க குறிப்புகளை அவ்வப்போது எடுத்துக்கொள்வார்கள். அன்றாடம் செய்ய வேண்டிய வேலைகளையும் திட்டமிட்டு அவ்வப்போது நாட்குறிப்பில் குறிப்பிட்டு அந்த திட்டத்தின்படி செயலாற்றுவார்கள். பொதுவாக பலர் விரும்பாத புத்தகங்களை இவர்கள் படிப்பதைக் காணலாம்.

தான் கற்ற அரிய விஷயங்களை பிறருக்குக் கற்பிக்க வேண்டும் என்ற ஆவல் கொண்டவர்கள். நடைமுறையிலும் அவ்வாறே செய்து வருவார்கள். இந்த ராசியில் பிறந்தவர்கள் பெரும்பாலும் கற்றறிந்தவர்களாகவும், அறிவாளிகளாகவும் பண்டிதர்களாகவும் புலவர்களாகவும் விளங்குவதில் ஆச்சரியப்பட வேண்டியதே இல்லை. ஆனால் இவர்களுக்கு தீராத குறை என்று ஒன்று உண்டு. அதுதான் எவ்வளவு நேரம் தீராத யோசனையில் ஆழ்ந்திருந்தாலும் முடிவு காணாமல் திணறுவது. இவர்கள் எதையும் சுயமாக முயற்சி செய்தால் பிரசித்தி அடையலாம். ஆனால் இவர்கள் தங்கள் திறனை பிறர் செய்தவற்றில் ஆராய்ச்சி செய்யவும், குறைகளை நீக்கவும், பழுதுபார்க்கவும் உபயோகிப்பார்களே தவிர, சுயமாக கவிதை, கட்டுரை எழுதுவது போன்ற ஆக்க வேலைகளில் ஈடுபட மனம் ஓடாது. பெரும்பாலோருக்கு எது சிறந்தது என்பதை ஆராய்ந்து பார்க்கும் அறிவாற்றல் நிறைந்திருப்பதாலும், குற்றம் களைந்து சீர்திருத்துவதிலேயே காலத்தைக் கழித்திடுவார்கள். எனவே, இவர்கள் பிற காவியங்களை மொழி பெயர்ப்பதிலும் வசன நடையில் இருப்பதை கவிதை ரூபமாக மாற்றியமைப்பதிலும் தங்கள் கருத்தையும் நேரத்தையும் செலவிடுவர்.

நேர்மையாக இருந்தாலும், பயமும், அச்சமும் கூடிய சுபாவமுள்ளவர்களாதலால் நேராக நடக்க அஞ்சுவர். தூய்மையாக உள்ளவர்களானாலும் துரிதமாக செயல்பட முடியாதவர்கள்.

புத்திர பிராப்தியைப் பற்றி இவர்களுகக் கவலை ஏற்படுவதேயில்லை. இல்லையே என்ற கவலையும் இருக்காது; இருந்தாலும் பிள்ளைகளைப் பற்றிய கவலையும் இருக்காது ஆசைக்கு ஒரு பெண், ஆஸ்திக்கு ஓர் ஆண் என்ற ரீதியில் இவர்களுக்குப் புத்திரப்பேறு அமைந்திருக்கும். ஒரு சிலருக்குபெண் குழந்தைகள் அதிகமிருந்தாலும், பிள்ளையில்லையே என்ற குறை இவர்களுக்கிருக்காது. இருக்கும் பெண் குழந்தைகளையே பிள்ளைகளுக்குச் சமமாக வளர்த்து அவர்களுக்கு ஆஸ்தியும் சேர்த்து வைப்பர். ஆனால், எந்தக் குழந்தைகளாயினும் இவர்கள் விருப்பத்திற்கு மாறாக நடக்காதவர்களாதலால், புத்திரர்களது விஷயத்தில் இவர்கள் பெரும் பாக்கயிசாலிகள் என்றே சொல்லவேண்டும்.

உடலாரோக்கியத்தை எச்சரிக்கையுடன் பாதுகாத்து வருவதால் இவர்களுக்கு நோய் நொடிகள் எதுவும் அதிகம் பாதிப்பதில்லை. உடல் ஆரோக்கியத்துக்கு அஸ்திவாரமான சுகத்தையும், சுகாதாரத்தையும் கடைப் பிடிப்பதோடல்லாமல் தடுப்பு முறைகளையும் அடிக்கடி கையாள்வதால் இவர்களை நோய்-நொடிகள் அதிகம் பீடிப்பதில்லை. அவற்றால் இவர்கள் கவலைப்படுவதுமில்லை. மற்ற லக்னத்தில் பிறந்தவர்களைப் போல் இவர்களுக்கு எளிதில் நோய்கள் ஏற்படா. இவர்களுக்கு வாயு சம்பந்தமான தேனமானதால் ஓரிரு சமயங்களில் மலச்சிக்கல் தோன்றிவிடும் அதுவும் ஏற்படாமலிருக்க சர்வ ஜாக்கிரதையுடன் நடந்து கொள்வர். உணவு உட்கொள்ளுவதிலும் காலம், நேரம், சமயம், சந்தர்ப்பம் இவற்றிற்கேற்றவாறு நடந்துகொள்வர். சிற்றுண்டிப் பிரியர்களானாலும் தேகாரோக்கியத்தை முன்னிட்டு எப்போதும் அளவுக்குக் குறைந்தே சாப்பிடுவர். சிறிய நோய்கள் தோன்றினாலும், உடனுக்குடன்சிகிச்சை செய்துகொள்ள சோம்பல் படமாட்டார்கள் இவர்களுக்கு பெரும்பாலும் நரம்புத் தளர்ச்சி, நரம்புச்சிலந்தி, கண் உபாதை, இரத்தக் கொதிப்பு அல்லது அழுத்தம், மேக நோய், பாண்டு ரோகம், கைகால் பிடிப்பு போன்றவை கவலையைத் தரும். ஒரு சிலருக்கு தலையில் அடிபட்டு காயங்களும் தழும்புகளும் ஏற்படக்கூடும். வெண்குஷ்டமும் தோன்றி சிகிச்சைக்குப் பின் மறையும். பசும் பால், கீரை வகை, பழவகைகளை தக்கபடி சாப்பிட்டுக்கொண்டு வந்தால் இவர்களுக்கு நோய் நொடி ஏதும் ஏற்படக் காரணமிருக்காது.

No comments:

என்னில் உள்ளது