ASTROLOGE

ASTROLOGE

23 June 2011

துலாம் பொதுபலன்


துலா லக்கினத்தில் பிறந்த ஜாதகர்கள் தராசுக்கோலின் சமநிலைக்கேற்ப ஏற்றத்தாழ்வுகளும் சமநிலையான குணங்களும் அமையப்பெற்றவர்கள்.

புகழ்பெற்ற இந்த லக்னத்தில் மாவீரன் நெப்போலியன், ஆறாம் ஜார்ஜ் மன்னர், இரண்டாவது மகாயுத்தத்தின் போது உலகத்தையே ஆட்டிப்படைத்த சர்வாதிகாரி ஹிட்லர், சைதன்னிய மகாபிரபு, அத்ரி மகரிஷி, பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி, பாரதத்தின் விடுதலைப்போருக்காக அரிய பெரிய தியாகங்களைப் புரிந்து, நமது இந்திய நாட்டினுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த தேசப்பிதா அண்ணல் காந்தி மகாத்மா, அக்பர், கர்னாடகத்தின் புலி என்று புகழப்பட்ட ஹைதர் அலி, ரஷிய நாட்டு சர்வாதிகாரி ஸ்டாலின், கண் பார்வையற்ற பிறபல பிடில் வித்துவான் துவாரம் வெங்கடசாமி நாயுடு, சர்.சி.பி. இராமசாமி அய்யர் ஆகிய அறிஞர்களும், சர்வதிகாரிகளும், நிர்வாகத்திரன் பெற்றவர்களும் பிறந்திருக்கிறார்கள்.

மூர்த்தி சிரிதெனினும் கீர்த்தி பெரிது என்ற உண்மை மொழியைப் பிரதிபலிக்கும் வகையில் இந்த ராசி நேயர்களின் குணபாவங்கள் அமைந்திருக்கும் தராசு எவ்வளவு சிறியதாகத் தோற்றமளித்தாலும் எவ்வளவு மதிப்புக்குரிய நுட்பமான பொருள்களையும் எடைப்போடப் பயன்படுவதைப் போல இந்த ராசி நேயர்கள் தோற்றத்தில் சிறியவர்களானாலும், பிறரை எளிதில் புரிந்து கொள்ளும் சாமர்த்தியமும் படைத்தவர்கள்-அவரவர் தராதரத்தை வெகு சீக்கிரத்தில் எடைபோட்டு நிர்ணயம் செய்து கொள்ளும் ஆற்றல் படைத்தவர்கள். இயற்கையாகவோ அல்லது உபயோகத்தின் விளைவாரோ தராசின் சமநிலை குறைந்தபோது நிறைவுபடுத்த ஒரு புறம் எடைக்கு ஆதாரம் வைத்து பிறகு எடை நிறுப்பது போல உங்களுக்குஇயற்கையாகவோ அல்லது செயற்கையின் விளைவாகவோ சில குறைபாடுகள் இருப்பினும் அவற்றை சரிப்படுத்திக் கொள்ளும் இயல்பு கொண்டவர்நீங்கள். பிறரை எளிதில் மயங்கிடச் செய்யும் வசீகரத் தோற்றம் இவர்களிடம் இயற்கையாகவே காணப்பட்டாலும் திருப்தி கொள்ளாமல் பிறர் கவனத்தைக் கவர்ச்சி செய்ய செயற்கை முறைகளையும் கையாள்வார்கள்.

ஆண்களாயினும் பெண்களாயினும் விலையுயர்ந்த ஆடை, ஆபரணங்களால் தங்களை அழகுபடுத்திக் கொள்வார்கள். ஆண்களில் பெரும்பாலோர் வினோதமாக மீசையை வளர்த்துக் கொண்டிருப்பர். பெரும்பாலோர் மீசையைத் தராசுபோல் அமைத்துக் கொள்வதில் முழுக் கவனத்தையும் செலுத்துவர். ஒரு சிலர் மூக்கின் துவாரங்களுக்கு அப்பால் மீசை வளர்வது சரியல்லவென்று அக்கறையுடன் ஒதுக்கி வைப்பர். வேறு சிலர் மீசை எவ்வளவு நீளமாக அமைகிறதோ அவ்வளவு தூரம்வளர்த்து இருபக்கமும் முனையில் கூர்மையாக முறுக்கேற்றுவார்கள். ஒருசிலர் மீசையை பிரஷ்போல் அமைத்துக் கொள்வதுண்டு. ஆக மொத்தத்தில் பிறர் கவனத்தை ஈர்க்குமளவுக்கு தங்கள் மீசையை அழகுப்படுத்திக் கொள்வதில் அக்கறை காட்டுபவர்கள் எனக்கூறலாம்.

பெண்களாக இருந்தால் நடு வகிடு எடுத்து இரட்டைப் பின்னல் பின்னிக்கொள்வர்-வயது வித்தியாசம் பாராட்டாத இந்த ராசிப் பெண்கள் நீங்கள் கூந்தலை விதம் விதமாக, கவர்ச்சிகரமாக அழகுபடுத்திக் கொள்வதில் அக்கறை காட்டுவர். செவியில் நீண்ட தராசு போன்ற ஆபரணங்களை அணிந்து கொள்வர். கண்களுக்கும், மேல் புருவங்களுக்கும் மைதீட்டி அழகுபடுத்துவதில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வர். இவர்களுக்கும் மற்ற பெண்களுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், இவர்கள் கண்களில் வெளிப்புறத்திலும் மைக்கோடுகள் நீண்டிருக்கும். மூக்கின் இருபுறமும் துவாரங்கள் குத்திக் கொண்டு நகையணிந்து கொள்வர். இல்லையென்றால் மூக்கு குத்திக் கொள்ளாமலேயே விட்டுவிடுவர். மூக்கின் தண்டு உயர்ந்தும், துவாரங்கள் அகன்றும் இருக்கும். இவர்கள் சிரித்தால் கன்னத்தின் இருபுறமும் அழகான சிறு குழி விழும். இவர்கள் இயற்கையாகவே அழகு வாய்ந்தவர்களாயினும், அத்துடன் திருப்தி கொள்ளாமல் செயற்கையாக அழகுபடுத்திக் கொள்வர்.

ஆண், பெண் யாராயினும் தோற்றத்தில் குள்ளமாக காணப்படுவர். இவர்களுக்கு வாய்க்கும் கணவன்-மனைவி அல்லது கூட்டாளிகள் இவர்களைவிட உயரமாகக் காணப்படுவர். மூக்கும் முழியும் லட்சணமாக இருக்கும். உங்களுக்கு உதடுகள் அசைந்தும் அசையாமலும் மேல்பல் வெளியே தோன்றும்படி அமைந்திருக்கும். நீங்களே பேசுவதற்கு முன்பே சிரித்து விடுவீர் ஆயினும் பிறர் உங்களிடம் பேசுவதற்கு முன்பே கவனிக்காதது போல் காட்டிக்கொள்வீர். மெல்லிய குரல் படைத்தவர்களாயினும், ஸ்பஷ்டமாகப் பேசும் உங்கள் பேச்சில் உறுதி தொனிக்கும். உங்களுக்கு முகத்திலோ அல்லது உதட்டிலோ சிறிய காய வடு அல்லது கறுப்பு மச்சம் இருக்கும்.

நேர்மையே குறிக்கோளாகக் கொண்ட இவர்கள் பிறர் நெறி தவறும்போது கோபம் கொள்வர். தராசுக்கோல் எந்தப் பக்கம் பாரம் அதிகமாகிறதோ அந்தப் பக்கம் சாய்ந்து கொடுப்பது போல் காணப்பட்டாலும், முடிவு இவர்களுடையதாகத்தான் இருக்கும். கோலைச் சாய்த்த போதிலும், தட்டுபாரத்தை சரியாக விட்டாலும் தராசுக்கோல் மீண்டும் சமநிலையை எய்வது போன்ற நடு நிலையான சுபாவம் கொண்டவர். இந்த சுபாவத்துக்கொப்ப இவர்கள் மேலிருந்து கீழிறங்குவதும், கீழே இருந்த மேலே ஏறுவதும் உண்டு. மாடியில் குடியிருப்பதாலும், மாடியில் தொழில் புரியும் அமைப்பு ஏற்படுவதாலும் இவர்களுக்கு இந்த மாதிரி சூழ்நிலை ஏற்படலாம். இது போலவே இம்மாதிரி ஏற்றத்தாழ்வுகள் இவர்களது வாழ்க்கையிலும் அமைந்திருக்கும் என்பதை நிதரிசனமாகக் காணலாம். தந்திரம் என்பதை உங்களிடம் காணமுடியாது. ஆனால் ஆத்திரம் தாங்கமாட்டீர்கள். உங்களுடைய மனோ நிலையை உங்களது கண்கள் வெளிப்படுத்திக் காட்டும். நீதியையும் நேர்மையையும் நிலை நாட்ட வேண்டுமென்பதை இலட்சியமாகக் கொண்ட நீங்கள் சட்ட திட்டங்கள் நீதிக்கு இடந்தராததைக் கண்டு சில சமயங்களில் சோர்வு கொள்வீர்கள்.

இந்த லக்னத்தின் முதற் பாகத்தில் பிறந்த ஜாதகர்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாகவும், யோகபோகங்களிலும் ஆடம்பர வாழ்க்கையிலும் விருப்பம் கொண்டு அவ்வாறே தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்வார்கள். எந்தக் காரியத்திலும் மிகவும் சுறுசுறுப்புடன் ஈடுபடும் இவர்கள் வாய்ப்புகள் தளர்ந்த போதிலும் மனந்தளராமல் மகிழ்ச்சியுடன் எதையும் ஏற்றுக் கொள்வார்கள். இவர்களுடைய வாழ்க்கை சந்தோஷகரமாகவே அமைய அவர்களது மனமும் குணமுமே காரணங்களாக விளங்கும்.

நீங்கள் எப்போதும் ஏதாவதொரு கவலையுடன் விளங்குவீர்கள். நிதான சுபாவமுடையவர்களாதலால் எக்காரியத்திலும் மிகமிக நிதானமாக ஈடுபடுவீர்கள். ஆழ்ந்த ஆலோசனை செய்தபின் முடிவு எடுக்கக் கருதி, கருத்துக்கு எட்டியது செயலில் ஈடுபடுவதற்கு முன்னமேயே மறைந்து விடும் அல்லது பிறரால் பறிக்கப்படும். எப்பொழுதும் கவலையே உங்களை சோர்வடையச் செய்ய தோடல்லாமல். உங்களது ஆர்வத்தையும், திறமையையும் குன்றிடச் செய்யும், நிரந்தரமான இன்பத்தைக் காண முயற்சி செய்தாலும் தோல்வியே அடைவீர்கள். சந்தோஷம் என்பது உங்களுக்கு கானல்நீர் போல் தோற்றமளிக்கும். இதற்கு உங்களது வீண் சந்தேகமும், தயக்கமுமே காரணம்.

நீங்கள் ஜாலியான பேர்வழிகளென்றே கூறவேண்டும். இருந்தபோதிலும் தங்களுடைய மகிழ்ச்சியையோ அல்லது துக்கத்தையோ வெளியே காட்டிக் கொள்ளமாட்டீர்கள். எதிலும் பற்றில்லாதவர் போல காணப்படுவீர். ஆனால் பிறரை எப்போதும் கேலி செய்வதில் வல்லவர். பிறர் சிரிக்கும்படி பேசும் நீங்கள் ஹாஸ்ய நடிகர்களாகவும், விதூஷகர்களாகவும் தோன்றி பிறரை களிப்பூட்டுவீர். தம் கொள்கை மக்கள் மனதில் பதிய வேண்டுமென்பதற்காக பேச்சினிடையே வினோதமான துணுக்குகளை அவ்வப்போது ஒவ்வொன்றாக ஹாஸ்ய ரசத்துடன் இணைத்துப் பேசி தம் கொள்கையை பிறர் மனதில் புகுத்துவீர்கள். சமூகத்தில் மிகவும் கண்ணியமாக நடந்து கொள்ளும் நீங்கள் எளிய வாழ்க்கையில் பேரானந்தம் கொள்வீர். பெரிய பதவி வகித்தபோதிலும் அல்லது அந்தஸ்துக்கேற்ப வாழ்க்கைத் தரம் உயர்ந்த போதிலும் ஏழை எளியவர்களிடம் பாகுபாடின்றி ஓரளவு மறைவுமின்றி திறந்த உள்ளத்துடன் பழகுவீர்கள். கிட்டாதாயின் வெட்டெனமறஎன்ற பழமொழிக் கொப்ப கிடைத்தவற்றில் திருப்தி கொண்டு பெருமகிழ்ச்சி கொள்வீர்கள்.

No comments:

என்னில் உள்ளது