
“கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்” என்ற சொல்லுக்கிணங்க, கடன் என்றாலே இவர்களுக்கு மிகவும் பயம். கடனே வாங்கக்கூடாது என்ற கொள்கையுடையவர்கள். ஒரு சிலர் கடன்வாங்க நேர்ந்தாலும், வட்டியில்லாக் கடனாகத்தான் வாங்குவார்கள். வாங்கினாலும் குறிப்பிட்ட தவணைக்குள் செலுத்தி விடுவர். எனவே இவர்களுக்கு பிறர்கடன் கொடுக்கத் தயங்குவதில்லை. எவரேனும் இவர்களுக்கு பெரும் உதவி செய்ய முன்வந்தாலும், அதைக்கடனாகப் பாவித்து இவர்கள் ஏற்க மறுத்து விடுவார்கள். பெருங்கடன் ஏற்க நேர்ந்தால் சொத்தில் பெரும் பகுதியை விற்றாவது கடனை அடைத்து விட்டுத் தான் தூங்குவர். இவர்களுடைய கல்வி, பக்தி, திறமை, பயிற்சி மற்றும் குணம் ஆகியற்றுக்கேற்றவாறு வாழ்க்கை அமையவில்லையே என்ற கவலை அடிக்கடி இவர்களை வாட்டிடும். மனதை அடிக்கடி குழப்பிக் கொண்டு, யோசனை செய்தும் முடிவு காண முடியாமலே எல்லாவற்றையும் சகித்துக் கொள்வர்.
கல்விப் பயிற்சியில் உள்ளபோதே தங்கள் வாழ்க்கை இவ்வாறுதான் அமையவேண்டும் என திட்டமிட்டுக்கொள்வர். ஆனாலும், வளர வளர இவர்களது திட்டங்கள் யாவும் தவிடு பொடியாகும். நெறியும், பண்பும் நிறைந்தவர்களானாலும் உற்றார்-உறவினர், பெற்றோர் வற்புறுத்தலினால் விருப்பமில்லாவிட்டாலும், திருமணம் செய்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படும். தம் வாழ்நாளில் இந்த அதிருப்தியைக் கொண்டிருந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளமாட்டார்கள். ஆனாலும் நாம் ஏற்கெனவே கூறியுள்ளபடி அனுசரணையும், குடும்பப் பொறுப்பை ஏற்று நிர்வகிக்கும் மனைவியும் இவருக்கு அமைவதால் இவர்களது திருமண வாழ்க்கை பூசல் ஏதும் இன்றி நறுமணம் வீசிக்கொண்டிருக்கும். இவர்களும் குடும்பப் பொறுப்பு முழுவதையும் மனைவி மீது சுமத்தி விட்டு பொறுப்பற்று விளங்குவர். வெளியுலகில் இவர்களின் அந்தஸ்து, படாடோபம், கௌரவம், பதவி, அதிகாரம், புலமை இவை கொடிகட்டிப் பறந்தாலும், வீட்டில் இவை செல்லா. இவர் சம்பாதிக்கும் பணத்தைச் சிதற விடாமல் இவர் வாழ்க்கைத் துணைவி கட்டிக்காத்து வருவதால், இவர்கள் எப்போதும் போல் புத்தகமும், கையுமாக அறிவு ஆராய்ச்சியில் கருத்தைச் செலுத்தி முன்னேறலாம்.
இவர்களுக்கு தனுசு, மீனம், ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, துலாம் ஆகிய லக்கினங்களில் தோன்றியவர்கள் மனைவியாகவோ அல்லது கூட்டாளிகளாகவோ அமைந்தால் இவர்களது வாழ்க்கை சோபிக்கும் மற்ற ராசிக்காரர்கள் சேர்க்கை ஏற்பட்டால் அபிப்ராய பேதமும், பொருள் தேசமும் ஏற்படலாம்.
இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் நீண்ட ஆயுள் பெற்றவர்கள். ஆனால் வாழ்க்கையில் பல இடையூறுகள் ஏற்பட்டு விலகும். கெண்டாதி தோஷங்கள் ஏற்பட்டாலும் இவர்களது ஆளுக்கு எவ்வித பங்கமும் ஏற்படாது என்பது மட்டும் உறுதி.
இவர்களுக்கு தூரதேச பிரயாணங்கள் அடிக்கடி ஏற்படும். ரகசியங்களும், மூடு மந்திரங்களும் இவர்கள் மனதில் இடம் பெறாதவையாலதால், தங்கள் மனதில் தோன்றியவற்றை வெளிப்படையாக அச்சமின்றி வெளியிடுவார்கள். துணிச்சலான செயல்களில் ஈடுபடக்கருதி அவ்வாறே செய்வதும் காட்டுவர். ஆனால் எந்நேரமும் அம்மாதிரி துணிச்சலான காரியங்களில் ஈடுபடுவது. நல்லதல்ல நடு நிசியிலும் எவ்வளவு தூக்கத்திலும் திடீரென விழித்துக்கொள்ளும் இயல்பு கொண்ட இவர்கள் பகலில் அதிகம் தூங்குவர். உறக்கத்திலும் கவனம் குறையாத ஞாபக சக்தி அதிகம் உண்டு. புரதான வஸ்துக்களையும் புத்தகங்களையும் வாங்கி சேகரித்து வைத்துக்கொள்ள தாரளமாக பணத்தை செலவு செய்வர். பிரயாணங்களாலும் செலவுகள் ஏற்படும். இவருக்கென்று அந்தரங்கமான விரோதிகள் இருக்கமாட்டார்கள். அப்படி ஏற்பட்டாலும் அவர்களிடமிருந்து சாமர்த்தியமாக தப்பிச் செல்லக்கூடிய ஆற்றல் பெற்றவர்கள்.
தாங்கள் சம்பாதிக்கும் செல்வத்தில் தர்மத்திற்கென்றும் ஒரு பகுதியை ஒதுக்கி வைப்பர். கோவில் கட்டுவதிலும் குளம்கிணறு வெட்டுவதிலும், ஏழைகளுக்கு உதவி செய்வதிலும், ஒருபகுதியை செலவிடுவர். பொதுகாரியங்களுக்கும் தர்மஸ்தாபனங்களுக்குத் தாராளமாக பொருளுதவி அளித்திடுவர். பொதுப்பணிகளில் பிறர் நிந்தையையும் பொருட்படுத்தாமல் பிரதி பலனை எதிர்நோக்காது கண்ணியமாக நடந்துக் கொண்டு எடுத்த காரியத்தை எளிதாக முடித்துக்கொடுப்பர்.
இவர்கள் குடும்பப்பொறுப்பை ஏற்கும் வரையிலோ அல்லது இவர்களுக்கு திருமணம் ஆகும் வரையிலோ தான் தகப்பனாரின் ஆதரவு இவர்களுக்கிருக்கும். அதற்குப்பின் இவர்கள் தனித்து வாழ நேரிடும். இவருடைய சம்ரட்சணையில் தகப்பனார் நீண்டகாலம் இருப்பது அரிதாகும். இவர் பிறந்த நாள்முதல் தகப்பனாரின் யோகபவாம் சிறந்து விளங்கினாலும் இவர்களது குடும்பப் பொறுப்பு ஏற்றுக்கொண்ட நாள் முதல் மாறுதலடைய ஆரம்பிக்கும். இந்த லக்னத்தில் பிறந்த ஜாதகர்கள் சிலர் சகல கலை நுணுக்கங்களையும் கற்றறிய விரும்பி அனுபவ ஆராய்ச்சியில் ஈடுபடுவர். இவர்களுக்குத் தெரியாத கலையே இருக்காது எனத்துணிந்து கூறலாம். எந்தத் தொழிலை ஏற்றுக்கொண்டாலும் கலை ஆராய்ச்சியை விடமாட்டார். பெரும்பாலும் இவர்களுக்கு இருவகைத் தொழில்கள் ஏற்படும். நிரந்தரமான தொழில் ஒன்று ஏற்பட்டிருந்தாலும் மற்றொரு உபதொழிலையும் உடன் புரிந்து பெயரும் புகழும் பெற்றிடுவர்.
ஆசிரியர், பொறியியல் வல்லுநர், அயல்நாட்டு தூதர்கள், வழக்கறிஞர், மேற்பார்வையாளர், கணக்காளர், எழுத்தாளர்கள், கதாசிரியர், சினிமா, நடனம், நாடகம், ஓவியம் முதலிய கலைத்துறைகளிலும் பணியாற்றுபவர்களாக இருப்பர். ஆயினும் எத்தொழில் ஏற்றுக் கொண்டாலும் திறம்பட நிர்வகித்துக் காட்டுவர். பத்திரிகைத் தொழில், சுகாதார முன்னேற்றம், நூல்நிலையம், பஞ்சாலை, பச்சைப் பயிர் வியாபாரம், இவற்றிலும் ஈடுபடுவர். அரசாங்கத்தில் பெரும் பதவிகள் வகிப்பதும் உண்டு. எத்தொழில் செய்பவராயினும், வாக்கு சாதுரியம், திறமை, கலைநுட்பம் இவரிடத்தில் பளிச்சிட்டுக்காட்டும். சங்கீதத்திலும் ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகத்திலிருந்த ஓய்வு பெற்ற பிறகும் பொதுப்பணிகளில் ஓயாது ஈடுபட்டு பேரும் புகழும் பெற்றிடுவர்.
இவர்களுக்கு கல்வித்துறையிலும் கலைத்துறையிலும் புலமை இயற்கையாகவே அமைவதால் புத்தகப்பிரசுரம், அச்சகம் அமைத்துக் கொள்ளுதல் ஆகிய தொழில்களில் இயற்கையாகவே இவர்கள் ஈடுபாடுசெல்லும். கதாசிரியர், இலக்கண, இதிகாச-காவிய புராணங்களை தமது பாணியில் மாற்றி எழுதுதல், மொழிபெயர்த்தல், சட்ட நுணுக்கங்களை ஆராய்தல், விமர்சித்தல், கதா-காலட்சேப பிரசங்கங்கள் செய்தல், ஓவியங்கள் தீட்டுதல் ஆகிய தொழில்களில் தங்களது முழுகவனத்தையும் செலவிடுவர். இளமையில் சிறிய தொழிலில் எழுத்தராகவோ தட்டெழுத்தராகவோ, சுருக்கெழுத்தராகவோ, கணக்கராகவோ அந்தரங்க காரியதரிசிகளாகவோ, உதவியாளராகவோ பணிபுரிய நேர்ந்தாலும், வயது ஏறஏற அனுபவ முதிர்ச்சி பெற்று, தான்பணிபுரியும் ஸ்தாபனத்தில் முக்கிய பெரும் பதவி வகிக்கும் வாய்ப்பு பெறுவர். ஸ்தாபன நிர்வாகங்களிலும், மேற்பார்வையிலும், தமது திறமையை எடுத்துக்காட்டுவார்கள்.
இவர்கள் வருமானத்துக்கேற்ப சிக்கனமாக செலவு செய்வார்கள். கஷ்டமான வேலைகளைத் தவிர்த்து, தேக சிரமமில்லாத பணிகளில் ஈடுபடுவர். பிறருடைய காரியதரிசிகளாகவும் விளங்குவார்கள். இவர்கள் மிக தந்திரசாலிகளும், வியாபார நோக்கும் உடையவர்களாதலால் எந்த வியாபாரத்தையும் திறம்பட நடத்திக்காட்டுவார். தேங்கி நிற்கும் மூலப் பொருள்களை விட்டு, வியாபாரம் செய்தே லாபத்தை பெருக்கிக் கொள்ளும் சாமர்த்தியம் பெற்றவர்கள். தம்முடைய புத்திசாலித்தனத்தை மூலதனமாகக் கொண்டு பிறர் செல்வத்தை முதலீடாகக் கொண்டு திறமையுடன் செயலாற்றி பயனடைபவர்கள். ஒரு சிலர் சுயமாக கவிபாடுவதிலும், கதை எழுதுவதிலும், சொற்பொழிவாற்றுவதிலும், பெண்கள் விரும்பும் பொருள்களில் வியாபாரம் செய்வதிலும் ஈடுபடுவர். ஒரு சிலர் ஜோதிட வல்லுநர்களாகத் திகழ்வதும் உண்டு.
பால், தயிர், வெண்ணெய், எண்ணெய், மண்எண்ணெய், பெட்ரோல், உணவுப்பொருள்கள் அரிசி வெண்ணிறப் பொருள்கள், பிற உணவுப்பொருட்கள், வீடு-கதவுகளை அலங்கரிக்கும் சாமான்கள் முதலிய தொழில்களில் ஈடுபட்டும் வருமானத்தைப் பெருக்கிக்கொள்வர்.
இந்த லக்னத்தில் தோன்றியவர்கள் மிகவும் பக்குவமான ஆகாரங்களை உட்கொள்வர். உயர்தர உணவுககைகளில் அதிக விருப்பம் கொள்ளாமல் பசி நேரத்தில் எது கிடைக்கிறதோ அதைத் திருப்தியுடன் ஏற்றுக்கொள்வர். ஆடைகள் விஷயத்திலும் ஆடம்பரப் பிரியர்களல்லர். தூய வெண்மையான உடைகளையே பெரிதும் விரும்புவர்.
இனி இந்த லக்னத்தில் தோன்றிய மாதர்களின் பலாபலனை ஆராய்ந்து பார்க்கலாம்.
இந்த லக்னத்தில் பிறந்த மாதர்கள், பெண்களுக்குரிய எல்லா இயற்கை குணாம்சங்களும் பெற்று சிறந்து விளங்குவர். குடும்ப விவகாரங்களில் மிகவும் அக்கறை கொண்ட இவர்கள் சிறுவயதிலிருந்தே குடும்பப் பொறுப்பில் ஈடுபட்டு பெற்றோருக்குப் பணிவிடை செய்வதில் கருத்துடன் விளங்குவர். பெண்களுக்குரிய அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, பொறுமை, அடக்கம், சகிப்புத்தன்மை. பெருந்தன்மை ஆகிய குணங்கள் இவர்களிடத்தில் சிறந்து விளங்கும். நிறத்தின் மாற்றுக் குறைந்த போதிலும் குணத்தில் மாற்றுக் குறையாதவர் மற்றவர்களுக்கு தாராளமாக உதவி புரியும் இவர்கள் அவசியமான தருணங்களில் வேண்டிய உதவியைப் புரிந்திடுவர். உணவு பரிமாறுவதிலும் விநியோகம் செய்வதிலும் தாராளமனதுடையவர்.
மற்ற பெண்கள் கடினமாகக் கருதும் வீட்டு வேலைகளை சுலபமாகவும், துரிதமாகவும் செய்யக்கூடிய ஆற்றல் பெற்றவர். தம்முடைய வேலைகளை முடித்துக்கொண்டு பிறருடைய வேலைகளையும் தாமாகவே ஏற்றுக்கொண்டு செய்து முடிக்கும் இயல்புபெற்றவர். தம்முடைய சுகத்தையும் தியாகம் செய்து பிறருக்காக பாடுபடுபவர். சில சமயங்களில் அதிக பொறுப்பு ஏற்றுக் கொள்வதால் தமக்குத் தாமே தீங்கு விளைவித்துக் கொள்வர்.
தாம்பத்திய வாழ்க்கையில் வாய்ப்பும், வசதியும் குறைவாக இருந்தாலும் இருப்பதைக் கொண்டு திருப்தி அடைபவர்கள். தங்கள் லட்சியங்களுக்கேற்ப கணவர் அமையாததாலும் கணவருடைய நெருங்கிய உறவினர்களாலும் இவர்களுக்குத் தொல்லைகள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். விவாகம் தாமதமாக நடக்கும் அல்லது சீக்கிரமாக நடந்தால் கணவரை விட்டுப் பிரிந்து வாழவும் நேரிடும். ஒரு சிலர் நீண்ட காலம் திருமணமில்லாமல் கன்னியாகவே காலம் கழிக்க நேருவதும் உண்டு. புத்திரப் பிராப்தியும் காலம் கடந்துதான் ஏற்படும் ஒரு சில குழந்தைகளே பிறக்காமல் போவதும் உண்டு. எது எப்படியிருப்பினும் இவர்கள் தடுமாற்றம் அடைய மாட்டார்கள். மற்றவர்களுடைய குழந்தையைக் கொஞ்சிக் குலாவுவதிலும் அவர்களுக்காக தங்கள் பணத்தையும் நேரத்தையும் செலவிடுவார்கள். இந்தப் பெண்கள் சிறியவர்களாயினும் பெரியவர்களைப் போன்று ஆசாரசீலங்களைக் கடைப் பிடிப்பார்கள். உள்ளத் தூய்மை பெற்றவர்கள். ஆயினும் பசிதாளாதவர்கள்.
இவர்களுடைய வாழ்க்கையே ஒரு தியாகம் நிறைந்த வாழ்க்கை என்றால் மிகையாகாது.
No comments:
Post a Comment